Monday, January 22, 2007

என் ஜன்னலின் வழியே : ' வெயில்'


"என்பிலதனை காயும் வெயில் போல

அன்பிலதனை காயும் அறம் !! "


பால்யம் என்பது கனவுகள் பூக்கும் தொழிற்சாலை.முடிவற்ற கனவுகளின் நீள்பாதயில், கடந்து வருவதே அறியாமல் பால்யதை கடந்து விடுகின்றோம். தொலைந்துவிட்ட கைக்குட்டையைப் போல, மனம் ஏனோ அதைத் தேடிப் பார்க்க விரும்புவதே இல்லை !. பால்யதின் அவமானங்களும், புறக்கணிப்புகளும் உடம்பில் உள்ள மச்சத்தைப் போல ஒட்டிக்கொண்டே வருகின்றன,வடுக்களின் கயப்பு அவ்வப்போது நம்மையறியாமல் நாவில் ஊறிவிடுகின்றன.அப்படிப்பட்ட ஒரு தருணத்தின் பதிவு தான் 'வெயில்'.

வெயில் கருணையற்றது.அது மனிதர்களின் சுபாவங்களை மாற்றி, மூர்க்கமேற செய்துவிடுகிறது.பின்னிரவுகளில் கூட, கண்களுக்குப் புலப்படாத தன் ஆயிரம் கைகளால் அரவணைக்கத் துடிக்கிறது வெப்பம். வெயிலேறிப்போன ஊர்களின் மக்கள், வெயிலின் சுபாவம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் - அவர்கள் சூரியனைப் போலவே அலைக்கழிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.

ஒவ்வொரு வீடும் வீட்டைவிட்டு ஓடிப்போனவர்கள் பற்றிய ஒரு கதையை வைத்திருக்கிறது. 'வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள்' என்று உலகில் ஒரு பிரிவினர் தனித்தே இருக்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கென ரகசிய ஆசைகளையும், தங்கள் ஊர் பற்றிய நினைவுமாய் நம்மைச் சுற்றி வந்து கொண்டு தான் இருகிறார்கள். அவர்களில் எத்தணை பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருப்பார்களோ ?? தெரியாது.

வயதும் ஆசையும் வளர வளர கால்கள் வீடு என்ற சுவர்களுக்குள் இருப்பு கொள்ள மறுக்கிறது.நானும் என் பதின் வயதுகளில் வீட்டை விட்டு ஓடுவதர்க்கான சரியான நாளைத் தேடி தேடி அலுத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், அருகில் வரும் பண்டிகையோ, பிறந்த நாளோ அந்த மகத்தான நாளை ஒத்திப்போட்டுவிடும். திரும்பவும் வீட்டை விட்டு ஓடும் வாஞ்சை கவ்விக்கொள்ள துடங்கி விடும்.

அப்படியொரு பருவத்திலிருக்கும் முருகேசன், வழக்கம் போல பள்ளியை முடக்கி விட்டு, உள்ளூர் டாக்கீசில் ஓடும் MGRபடத்துக்கு செல்கிறான்.தம்பி கதிரை அழைத்து செல்ல மறுக்கும் முருகேசன், நண்பர்களுடன் விசில், கைதட்டல், பீடிப்புகை சகிதம் படத்தில் மூழ்கியிருந்த நேரம், தியேட்டர் முதலாளி மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்கிறார் கசாப்புக் கடை வியாபாரியான முருகேசனின் அப்பா.

'நமது அவமானங்களும் வேதனைகளும் தான் நம் பிள்ளைகளின் முதுகில் அடிகளாக விழுகின்றன' என்பார்கள். உக்கிரமேறீப்போனவரான அப்பா, முருகேசனை சுடும் மண்ணில் நிர்வாணியாக, எல்லோரும் பார்க்க வீதியில் இழுத்து வந்து கட்டிப் போடுகிறார்.அவமானத்தின் வாய் கவ்விக் கொள்ள, அப்பவிடம் கெஞ்சுகிறான் முருகேசன். சலனமற்று பீடியை இழுத்தபடி அமர்ந்திருக்கிறார் அப்பா !.

அவமானப் படுவதை விட வேதனையானது, நம் அன்பிற்குறியவர்கள் முன் அவமானப் படுவது. சோட்டுப் பையன்களின் கேலிக்கு மத்தியிலும் அன்பிற்குரிய பாண்டியம்மவின் பரிதாவமான பார்வை வேதனையை அதிகப்ப் படுத்துகிறது.தம்பிதான் தன்னை மாட்டி விட்டிருப்பனோ என்று கோபித்துக் கொள்கிறான்.அம்மா தரும் உணவையும் புறக்கணிக்கிரான். ஊரே அடங்கிவிட்ட, உறக்கமற்ற அந்த இரவில் சலமின்றி ஊர்ந்து செல்கிறது நிலவு. சட்டென எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு, கையில் சிக்கும் பணத்தயும், நகையையும் எடுத்துக்க் கொண்டு ஊரை விலக்கிய பாதையில் நடக்க துவங்குகிறான் முருகேசன்.ஊரின் வெயில் அவனைப் பதுங்கியபடி பார்த்துக் கொண்டே இருக்கிறது.

கவர்ந்த பொருட்க்களை வெகு சீக்கிரத்திலேயே தொலைத்துவிட்டு, ஒரு தியேட்டரில் தஞ்சம் போகிறான்.கை தட்டல், விசில் சத்தம், சினிமாச் சுருள், ப்ரொஜ்க்டர் வெளிச்சம் என்று நீள்கிரது வருடங்கள். திரைகள் MGR, ரஜினி என்று மாறுகிறதே தவிற ரசிகர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். திரைகளின் ஓட்டத்திலேயே காலமாற்றத்தை பிரதிபலிப்பது நல்ல டச்.

வளர்ந்து ஆளான பின்னும் நிரய காசு சம்பாதிக்க வேண்டும் என்றும் , எடுத்து வந்த நகை, பணத்துடன் தான் சொந்த ஊர்பக்கம் போக வேண்டும் என்றும் தீராத ஆசை கொன்டவனாக இருந்தான் முருகேசன்.

எந்த ஒரு இளைஞனின் வாழ்வையும் காதல் வெகு சீக்கிரமாக ஆக்கிரமித்து விடுகிறது. வாழ்வின் பெரும்பகுதியை தியேட்டர் சீட்களுடன் கழித்த அவனுக்கு காதல் புதிய ஜன்னல்களை திறந்து வைக்கிறது.காலபேதமின்றி காதலி தங்கத்துடன் மோகித்துச் சுற்றுகிறான். காதல் ஒரு மணல் கடிகாரம்...அதில் மனம் நிறய நிறய மூளை காலியகிறது.அப்படியொரு 'பகல் காட்சியில்' காதலியுடன் அகப்படுகிறான். அதுவரை இனித்திருந்த காதல் அறுந்து போன பாசி மாலையைப் போல கண்முன்னே உருண்டோடுவதைப் பார்க்கிறான். தங்கத்தின் தந்தை "சினிமா காட்டி எம்பொண்ண மோசம் பன்னிட்டியேடா " என்று கதறுகிறார்.

தங்கத்துக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது இரவோடு இரவாக முருகேசனின் கொட்டகையில் வந்து நிற்கிறாள் தங்கம். விஷயமறிந்து வரும் உறவினர்கள் முருகேசனைத் தாக்குகிறார்கள். தொடர்ந்து நடக்கும் கலவரத்தில், தங்கம் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை விடுகிறாள். விருப்பத்துக்குறியவர்கள் கண் முன்னே சிதைந்து போவதைக் காட்டில் சொகத்தை உமிழ்வது வேறெதுவும் இருக்க முடியாது. காதலை இழந்தவனின் வாழ்வு வேறெதிலும் இருப்பு கொள்வது இல்லை. இதற்கிடையில் தன்னை மடியில் வாங்கி வளர்த்த தியேட்டரும் மூடப்படுவதால் வேலையும் பறிபோகிறது. "எங்களுக்கு இத விட்டா என்ன தெரியும் மொதலாளி " என்று கேட்க்கும் முருகேசனின் குழகுழத்த குரலின் அடியில் அவனின் அறியாமை நிழல் படிகிறது. தியேட்டர் முதலாளி எல்லோருக்கும் கொஞ்சம் காசு கொடுத்து விடை சொல்கிறார். பணத்தைப் பெற மணமற்றவனாக முருகேசன் திரும்பிப் பார்க்காமல் செல்கிறான். காலியான தியேட்டரிலிருந்து வெளியேறும் ப்ரொஜெக்டரை எல்லோரும் ஒரு சவ நிகழ்ச்சியைப் போல பார்க்கிறார்கள். தங்களை இத்தனை நாளும் மகிழ்வித்த விசித்திர ஜீவன் போவதை, சர்க்கசில் பஃப்பூன் விடைபெறும் காட்சி போன்றதொரு குழந்தையின் துக்கத்துடன் பார்க்கிறார்கள்.தான் தொழில் செய்த இடம் உருக்குலைவதைப் பார்க்க மனமின்றி ஏதோ ஒரு மூலையில் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறான் முருகேசன். வாழ்வில் முதல் முறை தான் தணித்து விடப்பட்டதாகவும், யாருமற்றவனாகவும் உணர்ந்து உடைகிறான்.

எல்லொருடைய கால்களிலும் கட்டப் பட்டிருக்கும் கண்களுக்கு புலப்படாத மாயக் கயிற்றின் மறுமுணை அவரவர் சொந்த ஊரில் தான் இருக்கிறது.அது தனக்கு தேவைப் படும் போது நம்மை இழுத்துக் கொள்வதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது.

தயக்கத்துடனும் கூச்சத்துடனும் சொந்த ஊரில் வந்திறங்குகையில் , சொந்த மண்பட்டு உடல் சிலிர்க்கிறது. பெரிதாக ஒன்றும் மாறியிராத ஊரில் தன் வீட்டைக் கண்டு கொள்வது கடினமாக இல்லை. அழுக்கு வேட்டி, ஒற்றைப் பை, துக்கத்தில் இடுங்கிய கண்கள், புழுதி படிந்த கால்கள் என தன் முன் நிற்கும் அவனை, எளிதில் அடையாளம் காண முடியவில்லை தந்தைக்கு.காலம் நம்மில் சில மாற்றங்களையும், அனுபவங்களையும் கொண்டுவந்தாலும், பால்யத்தின் சுபாவங்களும்சிறு வயதில் கொண்ட அச்சங்களும் நம்மை விட்டு அகலுவதே இல்லை !. அதனால் தானோ என்னவோ, இன்றளவும் நாம் படித்த பள்ளிகளையோ ஆசிரியர்களையோ கடக்கையில் ஒரு வித அச்சமும் பதற்றமும் வந்து தொற்றிக் கொண்டு, வருடங்கள் கழிந்த பால்யம் வந்து ஒட்டிக்கொள்கிறது.

அப்பா முன் சட்டையின் ஒரு மூலையைக் கசக்கிக் கொண்டு நிற்கும் முருகேசன் மீண்டும் ஒரு கரிசல் காட்டு சிறுவனாக மாறிவிடுகிறான். ஆத்திரம் கொள்ளும் அப்பா, அவனை அப்படியே போய்விடும்படி சொல்கிறார். சத்தம் கேட்டு வரும் அம்மா "யாரு தம்பி வேனும்?" என்று கேட்க, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத தவிப்பும், காலம் தன் அடையாளங்களை அழித்து விட்ட மாயமும், அவமானமுமாக வந்த வழியே திரும்புகிறான். போக்கிடம் தெரியாமல் நிற்க்கும் கால்களை
உற்று கவனித்திருக்கிறீர்களா?. அவை இரத்தம் உரைந்து நடுங்கிக் கொண்டிருப்பவை !. பசியும் வேதனையும் அலைக்கழிக்க ஒரு டீக்கடையில் ஒதுங்குகிறான் முருகேசன்.

(இது வரைக் கதை ! இதர்க்கு மேல் சினிமா !! )



எதர்ச்சியாக அங்கு வரும் தம்பியை எளிதில் அடயாளம் கண்டுகொள்கிறான். வருடங்கள் கடந்தும் தன் நினைவுகளின் சாலையில் கைகோர்த்து விளையாடிய அண்ணனின் நினைவு மேலெழுகிறது. மனது கணக்கிறது.குரல் உடைந்து போய் தம்பி "அண்ணே ! உன்ன நான்ஞ் சொல்லிக் குடுக்கலண்ணே" என்கிறான். கண்ணீர் தழும்ப இருவரும் கட்டியனைத்துக் கொள்கிறார்கள். உணர்ச்சி பொங்கும் காட்ச்சியில் திரையரங்கத்தையே நிசப்தமாக்கி அனைவரின் மனதயும் அள்ளிச் செல்கிறார்கள்...

அழயா விருந்தாளியாக தன் வீட்டிற்குள் மறு பிரவேசம் செய்யும் முருகேசனை சொந்த வீட்டிலேயே விருந்தாளி போல நடத்துவதும், வெயில் காயும் பகல் பொழுதுகளில் யாருமற்ற தனிமையும் உழற்றுகிறது. யாருமே அமராத ஒரு பூங்கா பெஞ்சைப் போல, பாதசாரிகள் இல்லாத ஒரு ஒற்றையடிப் பாதையைப் போல, நீள்கிறது முருகேசனின் நாட்கள்.

சொந்தக் கடையில் வேலை செய்யக் கூடாது என்று மறுக்கிறான் தம்பி.வேலையற்றவனின் பகல் பொழுது மிக நீண்டதாக இருக்கிறது. காலப் போக்கில் விருப்பங்கள் குலைந்து போய்விடுகையில் உறவுகள் ஒரு காய்ச்சல் மாத்திரையைப் போல அடிநாவில் கயப்பை ஏற்படுத்தத் துவங்குகின்றன.இவை அனைத்திலிருந்தும் அவனுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் தன் பதின்வயது தோழியான பாண்டியம்மாவும், அவளது குழ்ந்தயும்.நாம் விருப்பமுற்றவர்களின் மீது கொள்ளும் அன்பு, அவர்களின் குழ்ந்தைகளின் மீதும் தொற்றிக் கொள்கிறது. எப்போதும் பாண்டியம்மவின் குழ்ந்தயுடன் சுற்றுவதும், சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடி வெட்குவதும், சுற்றும் பம்பரத்தை பாண்டியம்மாவின் பெண்ணின் கையில் தருவதும், அவ்வாறு பாண்டியம்மாவிடம் கொடுத்ததை நினைவு கூறுவதுமான காட்சிகள் நெகிழ்ச்சி.

தங்கை திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் காணாமல் போகவே, முருகேசனின் அப்பா போடும் கூச்சலில் ஊரே திரண்டுவிடுகிறது. விஷயம் அறியாது வீட்டிற்க்கு வரும் முருகேசனிடம் "எடுத்திருந்தா குடுத்துருயா ! " என்று அம்மா கதற, "நா எடுக்கலம்மா..?" என்று சிறு பிள்ளைப் போல கூனி நிற்கிறான் முருகேசன். வெகுநெரம் கழிந்து வரும் தங்கை தோழிகளிடம் காட்ட எடுத்துச் சென்றதாக வந்து சொல்ல.."ஓ...என்று உடைந்து அழுகிறான் முருகேசன்...அவனது ஓலச்சத்தம் தெருவெங்கும் நீண்டு மறைகிறது".

நம்மை நெசிப்பவர்களே நம்மைச் சந்தேகப் படுவதைப் போல துர்பக்கியம் வேறென்ன இருக்க முடியும் ?. ஒரு கிழிந்த காகிதத்திற்கு இருக்கும் மதிப்பு கூட அற்றவனாக, காற்றில் அலைக்கழிக்கப் படுகிறது அவனது வாழ்வு.யாருமற்ற அந்தப் பகலில் போகும் இடம் அறியாமல் அவன் கால்கள் நடுக்கத்துடன் நகர்கிறது. வீட்டிற்க்கு திரும்பும் தம்பி கதிர் நடந்தவை அறிந்து ஆதிரமடைகிறான்.ஆண்ணனைத் தேடி அலைகயில், வியாபார எதிரிகளால்தாக்கப் பட்டு மருத்துவமணையில் உயிர் போகும் நிலையில் இருக்கிறான்.தனக்கு அனைத்துமான தம்பியைக் காப்பாற்ற எதிரிகளைத் தீர்த்துக்கட்ட புறப்படுகிறான் முருகேசன்.


தம்பி கதிரேசன் மருத்துவமணையில் உயிர் பிழைத்து கண்திறக்கையில், முருகேசன் சலனமற்று கண்கள் நிலைகுத்தி உயிர் பிரிகிறான்.கடைசி வரை தன்னால் யவரக்கும் பயனற்றுப் போன வெறுமை அவன் உறைந்த கண்களில் தென்படுகிறது...துக்கம் பீறிட எல்லோரும் பெருங்குரலெடுத்து அழுகிறார்கள். "எங்குலத்த காத்த தெய்வம்டா அவன் " என்று முதல் முறையாக முருகேசனுக்காக கண்ணீர் சிந்துகிறார் அப்பா. என்ன உறவு சொல்லி அழுவதென்று அறியாமல் பாண்டியம்மாவும் அவள் பெண்ணும் அழுகிறார்கள். அனைவரின் துக்கத்தயும் வாங்கி குடித்துக் கொண்டு சலனமற்ற ஒரு குளத்தைப் போல முருகேசன் படுத்திருக்க திரை சுருள்கிறது.

புல்லைக் காட்டிலும் வேகமாக வளர்வது எது என்று கேட்க்கும் யட்சதனிடம் - ' கவலை' என்கிறார் தருமன். தீராத கவலை பீடித்த மனிதனாக திரையெங்கும் வியாபித்து இருக்கிறார் பசுபதி. எல்லாக் குடும்பங்களிலும் யாரோ ஒருவருக்கு மட்டும் எதுவுமே சரியாக அமையாமல் கவலையின் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.அவர்களின் துக்கங்கள், பேச்சுக்கள், இரகசிய கண்ணீர் ஆகியவற்றின் பதிவாக இருக்கிறது 'முருகேசன்' கதாபாத்திரம்.

தாயால் பதுக்கி வைக்கப்பட்ட, பகிர்ந்தது போக மிஞ்சிய முறுக்கோ, அதிரசமோ எல்லோருக்கும் வாய்க்கப் படுவதில்லை. ஒரு தொப்பூழ்கொடி வரும் இருவரின் மாறுபட்ட இரு வாழ்வின் விசித்திரமான பாடலை ஒலித்துச் செல்கிறது 'வெயில்'. திரையரங்கு விட்டு வெளி வரும் எல்லோரும் தமக்கு வேண்டிய யவரோ ஒருவரின் நினைவு மேலெழுந்த படி வருகிறார்கள்.

நள்ளிரவுக் காட்சி முடிந்து, ஆளரவமற்ற நெடுஞ்ச்சாலையில் நடந்து வருகிறேன். யவனோ ஒரு சிகரட்டை புகைத்து எறிந்த படி ஒரு கைப்பையுடனும், அழுக்கு வேட்டியுமாக வருபவரிடம் அடுத்த வண்டிக்கான நேரம் கேட்டு நிற்கிறான்.அனைக்கப் படாத சிகரட் காற்றில் கரைகிறது..

வர்த்தைகள் தானாக வந்து விழுகிறது...


"தூக்கி எறியப்ப் படும் சிகரட்டுகள் கூட

யாரோ ஒருவனால் பொறுக்கப் படுகிறது


அதைப் பற்ற வைத்த தீக்குச்சிகள் தான்


யாருக்குமே பயனற்றுப் போய் விடுகிறது"


*** முற்றும் ***

Monday, September 25, 2006

என் ஜன்னலின் வழியே: ரஜினி சப்தமா? சகாப்தமா?


ரஜினி :சப்தமா? சகாப்தமா?

::சக்த்திகள் அதிகமாகும் போது பொறுப்புகளும் அதிகமாகிறது ::
(SPIDERMAN படத்தில் வரும் ஒரு வசனம்)


"பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..
லட்சியமாவது புடலங்காயாவது..
சுகமாக,சந்தொஷமாக,நிம்மதியாக வாழனும்..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ விடனும்.. "



இது ஏதோ சாமியாரோ..அல்லது தெருக்கோடியில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் மனிதரின் பேச்சல்ல.தமிழ்த் திரையுலகின் புதிய கதவுகளைத் திறந்து,பல இலக்கணங்களை உருவக்கி,மிகக்குறுகிய காலத்தில் இன்று உலக அளவில் தனக்கென ஒரு மிகப்பெரிய மக்கள்கூட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு மாமனிதனின் சொற்கள். ஒரு 25 வருடங்களுக்கு முன் அந்த தாடியுடன் கூடிய மெலிந்த கருத்த அழுக்கு மனிதன் திறந்த ஒரு பழைய இரும்பு கேட், தமிழ்த் திரை உலகின் புதிய வாசல்களைத் திறக்கப் போவதைப் பலரும் அப்போது அறிந்திருக்கவில்லை...!!

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிஷத்தில் கூட இந்த கருத்த மனிதர் ஏதோ இடங்களில் அநியாயத்திற்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டோ,காதலியுடன் டூயட் பாடிக்கொண்டோ,வில்லனுடன் சண்டை போட்டுக் கொண்டோ இருக்கிறார்.

'ரஜினிகாந்த்' என்ற பெயர் தமிழ்த் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத மந்திரமாகியிருப்பதற்கு பின்னால் '''ஷிவாஜி ராவ்''' என்ற தனி மனிதரின் வாழ்க்கை எவ்வாறு ''பரிநாமம்'' அடைந்திருக்கிறது என்பதற்கான பதிவோ அல்லது அதற்கான முயற்ச்சியோ தான் இந்த படைப்பு !.

'ரஜினி' என்ற பெயரே எனக்கு "இது எப்படி இருக்கு?" என்ற வசனத்தின் மூலம் தான் எனக்குள் பதிவாயிருக்க வேண்டும்.அப்போது 'அபூர்வ ராகங்கள்'ளோ...'பைரவி'யோ பார்க்கும் அளவுக்கு பொறுமையோ பக்குவமோ எனக்கு போதாது.

நான் சொல்வது 1980 களிலிருந்து 1990 களில் இருக்கும்...சினிமா ரசிகர்களே 'ரஜினி' 'கமல்' என்று இரு வேறு துருவங்களாக பிளவுபட்டிருந்த நேரம்..நான் அப்போ கமல் சைடு !).பைத்தியக்காரன் ,பரட்டைத்தலையன் என்று கேலிகளும் நையாண்டிகளும் பரப்பியபடி இருந்த போதும் ரஜினி ரசிகர் கூட்டதின் பிரம்மாண்டத்தை எண்ணி வியப்பாக இருக்கும்.நானும் ரஜினியின் ரசிகனாகும் ரகசிய ஆசை கொண்டவனாகவே இருந்தேன்!.

அது 'தளபதி' படம் வெளிவந்திருந்த சமையம்.எனக்கு 8 வயதிருக்கும்.மணிரத்னம்,மம்முட்டி,ரஜினி என்று
மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்த திரைப்படத்திற்கு யாரோ கைப்பிடித்து அழைத்து சென்றதாய் ஞாபகம்.
அந்த சினிமாவில் எங்கும் பிரவேசித்த 'சூர்யா' என்ற மனிதன் திரையரங்கை விட்டு வெளியே வந்த
பின்னரும் என்னைத்த் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தான்.இரவில் என்னுடனே ஓரத்தில் '''கிடந்துரங்கினான்''.
ஏதோ கொடியில் உலரும் மஞ்சள் துணி சூர்யாவையே நினைவுபடுத்தியது.அந்த மனிதனின் கண்ணீர்
கணமாக இருந்தது...அவன் கைகள் பழுப்பேறி இருந்த போதும், அவன் பார்வையில் கூட அன்பை
வெளிப்படித்துபவனாகவே இருந்தான்-. ரஜினி என்கிற பிம்பம் என்னுள் படியத்துடங்கியது அப்போதிலிருந்து தான்.


தமிழ் நாட்டில் இரண்டே வகை மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.

ஒன்று ரஜினியை விரும்புபவர்கள் ;
இரண்டு ரஜினியை வெறுப்பவர்கள்;

புறக்கணிப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது !.

இதுவரை யாருக்கும் அமைந்திராத அளவுக்கு ரசிகர்வட்டாரம் ரஜினிக்கு வாய்த்துள்ளது.கையை சுழற்றி
சல்யூட் அடிக்கும் இரண்டு வயது குழந்தை முதல் 22வது முறை ஒளிபரப்பினாலும் 'பாட்ஷா'வையும்
'அண்ணாமலை'யும் வாய்பிளந்து பார்க்கும் தாய்மார்கள் வரை ரஜினியின் தாக்கம் இருக்கதான் செய்கிறது.
வருடத்திற்கு 2 படங்கள்வீதம் வரும் சமகால 'இளசு'களை ஓவர்டேக் செய்து அனைத்து ரசிகர்களின் இதைய
சிம்மாசனத்திலும் அமர்கிறார் ரஜினி.

ஒரு கேளிக்கையாளன் எப்போது நட்சத்திரம் ஆகிறார் ?
ஒரு நட்சத்திரம் எப்போது ஒரு தலைவன் ஆகிறான் ?

ஒரு தலைவன் எப்போது சகாப்த்தமாகிறான் ?

என்ற வினவுகள் ஒரு மனிதனிடம் கவனிக்கப்பட வேண்டியவை.அது ரஜினிகாந்தோ...வேறு
காந்த்தோ...M.G.R.ரோ..வேறுயாரோ எல்லோருக்கும் பொருந்தும்.

இதே ராயப்பேட்டையில் மூட்டை சுமந்த ஒரு மனிதன் இன்று எந்த பொதிமூட்டைகளில் தேடினாலும் அவரின்
ஒன்றிரண்டு புகைப்ப்டமாவது கிடைக்ககூடும் என்பது உறுதி.வாழ்வின் முழுநீள ஏற்ற இறக்கங்களை கடந்து வந்த
எந்த மனிதனுடைய வாழ்வும் பாதுகாக்கப் படவேண்டியது தான்.அந்த வகையில் இந்த புத்தகம் அக்கடமையைச்
செய்துள்ளது!.

இவ்வாறு வெற்றிகளை சுவைத்துவந்த சாதணைகளுக்கு பின்னால் பல அறிவாளர்களது பங்கு இருக்கிறது.அவை
அனைத்தையும் பரவலாக விரித்திருக்கிறது இந்நூல்.

ரஜினியின் வாழ்வில் வரும் வெவ்வேறு காலகட்டங்களை அவரின் பட தலைப்புகளைப் பயண்படுத்தியிருப்பது நல்ல CREATIVITY

புத்தக பெரும்பான்மை பக்கங்களில் ரஜினி சொன்னதாக வரும் கருத்துக்களௌக்கு அவர் அளித்த பேட்டிகளையே
மேற்கோள் காட்டியிருப்பது சிறந்த உத்தி.இது தேவையில்லாத சந்தேகங்களை களைவதுடன் ,நாம் உறுதி
செய்யப்பட்ட கருத்துக்களைத் தான் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.

ரஜினி மசாலாப் படங்களையே செய்து வந்தாலும் கலைப் ''ப்டங்கள்'' மீது கொண்டிருக்கும்
ஈடுபாடுகளையும்.,அவரது இலக்கிய ''ரசணை'' '''உபபந்ந்டவம்','''விஷ்ணூபுரம்' ''போண்ற'' சுத்த இலக்கிய படைப்புகள்
வரை நீள்வது இதுவரை கேட்டிறாத தகவல்கள்

புத்தகத்தில் வரும் கருத்து வழிதல் முனுக்குப் பின் முரனாக இருப்பதுவும்,சிற்சில இடங்களில் ஆசிரியர் தடுக்க
வேண்டும் என்று நினைத்த போதும் ஒருதலைபட்சமான 'ஜால்ரா' கருத்துக்கள் வெளிப்படுவதும் சிறிய நெருடல்.

தமிழ் ரசிகர்களுக்கும் ,தமிழ் ரசணைக்கும் ஒரு முன்னுதாரணம் ரஜினியின் வெற்றி.அது வரை சினிமா உலகில்
ஹீரோக்களை மட்டுமே பிரதாணப்படுத்தி வந்த காலகட்டம்.ஹீரோ போலவே முடிவெட்டிக் கொள்ளவும்,துணி
அணிந்து கொள்ளவும் விரும்பினார்கள்.ஆனால் ஒரு வில்லனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது தமிழ்
சினிமா.ஆடை ,அலங்காரம் தாண்டி ஒரு நடிகனின் (mannerism) மேனரிசத்தை மக்கள் 'கப்' என்று பிடித்துக்
கொண்டார்கள்.ஹிந்தி உலகில் கடந்த 20 ஆண்டுகளில் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு 'ப்ரான்' ** என்றூ பெயர்
வைக்கவில்லை என்கிறது ஒரு பிரபல பத்திரிக்கை.ஆனால் இங்கோ கதையே வேறு...ரஜினி சிகரட்டைக் கவ்விப்
பிடித்தாலோ...தலையைக் கோதி விட்டாலோ..வெளியே வரும் அனைவரும் அதை முயற்சிக்கிறார்கள்.பாட்சா படம்
பார்க்கப் போனால் திரையரங்கை விட்டு ஆயிரக்கணக்கில் பாட்சாக்கள் வெளிவருகிறார்கள்...''இன்த ''சக்த்தியைத்'' தான்
அரசியலுக்கு ரஜினியை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டியது.

( **ப்ரான் :-ஹிந்தியில் மிகப் பிரபலமான வில்லன் நடிகர்.நம்ம ஊர் நம்பியார் மாதிரி )

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஒருமுறை இணையற்ற படைப்பாளி அடூர் கோபாலகிருஷ்ணன்
கூறியதை நினைவுக்கு வருகிறது "ஒரு நல்ல நடிகனால்,நல்ல தலைவனாகவும் நடிக்க முடியும்" என்றார்.அதனால்
சினிமாக்காரர்களின் அரசியல் பூச்சு இவவளவு முக்கியத்துவமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்க்கு
ரஜினியே நல்ல உதாரணம்.

ரஜினியென்ற நடிகரிடம் தமிழகம் ,கலை உலகம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறது!. பழைய ரஜினி படங்கள்
(முள்ளும் மலரும்,ஜானி,6முதல் 60 வரை) போன்ற படங்களைக் காண எத்தனையோ நாள் விடுப்பு
போட்டிருக்கிறேன்.ஹிந்தியில் அமித்தாப் செய்யும் ரோல்களைக்க் காணும் போது வயிற்றெரிச்கலாகத்தான்
இருக்கிறது.ரஜினியும் இப்படி ஒரு இன்னிங்ஸ் வருவாரா என்று?

ரஜினி பற்றிய பரிபூர்ணமான புத்தகம் என்று இதைக் கூற முடியாவிட்டாலும்,ரஜினி என்னும் வாழ்வியல்
நிகழ்வுகளை,அவரைச் செதுக்கிய நிகழ்வுகளை,தருணங்களை கவனமாக கையாண்டிருக்கிற ஒரு புத்தகம்...

சில உண்மைகள் மறைக்கப் பட்டிருந்தாலும்...சொல்லிய வரை உண்மையே என்று கூறிக்க் கொள்ள முடியும்!!.


ரஜினி என்ற வெற்றி மனிதனின் வரலாறு இதில் சப்தமாக சொல்லப் பட்டிருக்கிறது...
இது சகாப்த்தமாவது காலத்தின் கையில் தான் இருக்கிறது...


இந்த தலைப்பை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்....
என் புதிய i-PODடில் ஒரு பாடல் கேட்க நினைத்து ஆன் செய்கிறேன்...

ஹை பிட்சில் பாடல் ஒலித்தது...

"விடுகதையா உன் வாழ்வே...!


விடை சொல்லுவார் யாரோ...!! "


எழுத்து-கோட்டொவியம்

ப்ரவீன்




பயணங்களின் முடிவில்...

( நிலைகொள்ளா உலகில் நினைவுகள் மட்டுமே நமக்கு சொந்தமாகின்றன.பால்ய வயதிலிருந்து பதின் வயதுகளின் சிறகுகளைக் ஏதோ ஒரு அவசரத்தில் களைந்து விட்டு வந்திருக்கிறோம்.நாம் படித்த கல்லூரியோ பள்ளியோ நம் முறிந்த சிறகுகளைச் சேகரம் செய்து வைத்துள்ளது.கல்லூரிக்கால நண்பர்களும் மனிதர்களும் அப்படியே காலத்தின் கைபடாமல் மனதில் நிலைகொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு நிலவெளியில் பிரவேசித்த நினைவின் மணற்பரப்பிலிருந்து இருந்து சில கிளிஞ்சல்கள் இதோ ...)



சஞ்சி* நிறைய துணிகளுடனும் மனது நிறைய அனுபவங்களுடனும் பேருந்திலிருந்து இறங்குகிறேன்.அருகில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் ஏதோ மிகவும் நெருக்கமான நண்பர் போல விடை சொல்கிறேன்.ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் காலியான கீசை**களும் ,பிதுஙும் அனுபவங்களும் திணிக்கப்பட்டிருக்கின்றன.ஓரிரு சஞ்சிகள் அதிகமாயிருக்ககூடும்.ஒவ்வொரு பயணமும் பெண்மையை முழுமையாக சுகித்தவனைப் போல சோர்வையும் சுகத்தயும் அளிக்கிறது. [ *சஞ்சி-( பயணப் ) பை **கீசை-பாக்கெட் ]

நான் ஒரு தூரதேசி.காற்றின் பாடலுக்கு காது கொடுத்துக் கொண்டே,இலைகள் படபடக்கும் இரகசியங்களை சேகரித்துக் கொண்டே இந்த பிரதேசத்திற்க்கு வந்தவர்கள் தானே நாம்.நான் ஒரு கூழாங்கற்களைப் போல நினைவுகளைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.கூழாங்கற்களை கன்னங்களில் வைத்து பார்த்திருக்கிறீர்களா?.அதில் நதி ஓடும்ம் சப்தம் கேற்கும்.நமக்குள்ளும் ஒரு நதி ஓடியவண்ணம் தானிருக்கிறது.அதனால் தான் நதி ஓய்வதே இல்லாமல் அலைபாய்ந்த படி இருக்கிறதோ?.நான் வார்த்தைகளை விழுங்கிவிட்ட கூழாங்கல்.

இந்த நிலப்பரப்பில் ஒரு ஆயிரம்பேர் இருப்பது தோராயமான கணக்கு தான்.பல்லாயிரக்கணக்கான பேர் தங்கள் சுவடுகளை விட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.மின் கம்பத்தில் தோய்த்த சுண்ணாம்பு போல அவை நிறம் மாறியிருக்கும் கவனித்திருக்கிறீர்களா?.நாம் எவரெவரோ காலடிச்சுவடிகளின் மேல் நடக்கிறோம்.யார் யாரோ அமர்ந்த இருக்கைகளில் உட்கார்ந்து தோள்களை பகிர்கிறோம்.நம் முகங்கள் யார்யாரையோ எவர்க்கோ நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.வசந்த காலத்தில் வீசும் காற்றில் இலைகள் ஆடும்போது எவனோ முன்னோன் ஒருவனைப் பற்றிய இரகசியத்தை கசிவதை கவனித்திருக்கிறேன்.உதடுகளில் தேக்கி வைக்கப்பட்டு செலவழிக்கப் படாத முத்தங்கள் கூட இங்கு நிராசைகளாக அலையக்கூடும்.யாரோ இரண்டுபேர் காரணமின்றி நட்பை அறுத்துக்கொண்ட துரதிஷ்டமான தடங்களில் மறுபடியும் பேசப்படாத வார்த்தைகள் மௌனமாக சஞ்ஜரித்துக் கொண்டே இருக்கிறது.நெடிய பொழுதுகளில் அவ்விடங்களை கடக்கையில் விசும்பல் சப்தம் மேலெழுகிறது.தொண்டையில் ஏதோ அடைத்து வலியை உண்டக்குகிறது.கண்களின் ஓரத்தில் சோகம் படிந்து விடுகிறது.

ஏதேதோ காரணங்களுக்காக எவெரெவரோ வெட்கி பூத்த மலர்களில் இன்னும் அதன் சிலிர்ப்பு மீளவே இல்லை.
பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்துடன் எவனோ மரத்தடியில் கற்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்.அந்த பரல்களின் சப்தம் ,ஒரு ஈரத்துணியைப் போல உலர்ந்த வண்ணம் இருக்கிறது.

கல்லூரியிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு கிளம்பும் பயணிக்கும் போதும் பேருந்து நிறுத்தம் வரை நண்பன் வருகிறான்.நாம் தனியே பயணிக்கிறோம்.தனியே விடப்பட்டவனாக திரும்புகிறான் நண்பன்.ஒவ்வொரு பயணத்திலும் யவரோ ஒருவர் விடப்பட்டுவிடுகிறார்கள்.மற்றவர் அவர்களை நினைத்தபடி பயணிக்கிறார்கள்....

வார்த்தைகள் தீர்ந்து விடப்போவது போல அவசர..அவசரமாக பேசிமுடிக்கிறான்.பேருந்து வந்துவிடுகிறது...ஓடிச்சென்று ஏறியவனிடம்.."எப்ப வருவ டா? " என்கிறான் உரத்தகுரலில்.அந்த கேள்வியே சீக்கிரம் வரவேண்டும் என்று தோன்ற வைக்கிறது.மனம் கணத்தவனாக திரும்பிக்கொண்டிருந்த அவனை கவனித்தேன்.அவன் தனியே நடக்கும் போது கூட நான்கு கால் தடங்களை விட்டுச்செல்பவனாக இருந்தான்.

பால்யத்தின் இறுதி நாட்களைக் கழித்த இடங்களைக் கடந்து வந்து கொண்டிருந்தேன்.அங்கு தொலைத்து விட்ட அறியாமையைத் தேடி கலைகிறேன்.காற்று அதை சேகரம் செய்து வைத்துள்ளது.தொடமுயன்ற போது விரல்களின் நடுவே கிழிந்து சென்றது காற்று.

காரணமற்ற சினேகம் கொண்ட மனிதர்களை அங்கு பார்க்க முடிகிறது.பால்யகிலேசத்தில் வந்து புகையிலைப் பொருட்க்கள் கேட்க்கும் பையன்களை விரட்டி விடும் கடைக்காரர்களையும்,ஒருமுறை 4 சிகரட் கேட்ட ஒருவனிடம் "இன்று இதுமட்டும் போதுஞ் சாமி " என்று இரண்டை மட்டும் கொடுத்தனுப்பும் டீக்கடை வியாபரிகளிடமும் சினேகம் கொண்டவனாகவே இருந்தேன்.வியாபாரத்தையும் மீறிய அவர்களின் முதிர்ச்சியான அன்பு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.




சிலுவையை சுமப்பவன் போல நகர முடியாமல் அவ்விடங்களைக் கடக்கிறேன்.சிலுவை சுமப்பவன் இன்னும் சில காலத்தில் அந்த சிலுவை தன்னை சுமக்க போவதை அறிந்தே இருக்கிறான்.தார்சாலை சூட்டில் உருகுவதைப் போல ரகசியமாய் துக்கம் ஏதோ மூலையில் கசிவதை உணர முடிகிறது.அப்போது தான் தெரிந்தது ஆண்டு மாற்றங்களில் இழந்தவைகள் பட்டியலில் கண்ணீரும் சேர்ந்துவிட்டது.

நண்பன் பையின் ஒரு மூலையைப் பிடித்தபடி வருகிறான்.கூடாத சாத்யங்களில் மனம் கூடுகிறது.மனம் ஒரு எடைக்கல்லைப் போல் கனமாக இருக்கிறது.அப்போது தான் வந்தேரிய ஒரு மாணவன் யாரையோ விசாரித்தபடி உள்ளே செல்கிறான்.ஓரு கர்பஸ்திரியைப் போல காலம் பார்த்துக் கொண்டே இருந்தது கண்ணீர்.இரண்டு பேருந்துகள் கடந்து போயின.."அடுத்த வண்டியில் போகலாம்", என்றான் நண்பன்.நிராகரிக்கப் பட்ட வன்மத்தில் சுட்டது சூரியன்.தூரத்தில் வரும் அடுத்த பேருந்தில் செல்ல ஒப்பியது மனம்.ஏறிக்கொண்டேன்...கையசைத்தேன்...நகரும் பேருந்தில் துண்டாகித் தெரிந்தது நண்பனின் பிம்பம். தேக்கி வைத்த கண்ணீர் தொண்டயில் வலியை உண்டாக்கியது...."எப்ப...வருவ..." என்பது போல எதையோ கேட்க வந்து மறந்தவன் போல நின்றான்.

வெயில் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது !

Thursday, August 31, 2006

என் ஜன்னலின் வழியே- 'நெடுங்குருதி'

நெடுங்குருதி - தமிழின் தலை சிறந்த படைப்பு

( இந்த விமர்சணத்தை படித்து பார்த்து,இதைப்பதிவிட ஒப்புதலும்..பாரட்டும் அளித்த ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி )


புத்தக கடைகளில் ஒரு நாவல் என்னை படிக்குமாறு நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருக்கிறது.விலையும்,வேலையும் ஒத்திப்போட்டுக் கொண்டே வந்தது.

படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏற்கனவே அலமாரிகளில் காத்திருந்த போதும் புது புத்தகங்கள் வாங்குவதை நிறுத்த முடிவதே இல்லை. மிட்டாய்க்காரன் பின்னால் செல்லும் ஒரு குழந்தையைப் போல மனம் மீண்டும் மீண்டும் அச்சுக்களை நோக்கி செல்கிறது.அப்படி புத்தகமே வாங்கக்கூடாது என்று வைராக்கியமாக கடைக்குள் நுழைந்த ஒரு பொழுதில் 'நெடுங்குருதி' வாங்கினேன்.

நாவலின் முதல் பக்கத்திலிருந்தே புதிய ஒரு உலகத்தில் ப்ரவேசிக்கும் அனுபவம் உண்டாகிறது.வெயில் உக்கிரமேறிப் போன 'வேம்பலை' என்ற கிராமத்தில் கதை சம்பவிக்கின்றது.எந்த கதாபாத்திரத்தயும் சுற்றிவராமல் நிகழ்வுகள் வேம்பலை என்ற நிலவெளியை சஞ்சரித்து வருகிறது.கதையில் படிந்திருப்பது வேம்பலையின் நிழல் மட்டும் அல்ல!.ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற ஆட்கள்-ஒடுங்கிவிட்ட-கிராமங்களின் நிழல் தான் கதை எங்கும் படிந்து கிடக்கிறது.

வேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள்.அவர்கள் நம்பிக்கைகள் ,வழிபாடுகள் அனைத்தும் கேட்டிராதவையாக இருக்கிறது.ஒருவேளை நம் முன்னோர்கள் இப்படித்தான் அலைந்து கொண்டிருந்திருப்பார்கள் போல."எறும்புகள் ஒரு ஊரை விட்டு விலகிப்பொனால்,அந்த ஊர் மனிதர்கள் வாழ சாத்தியமற்று போகிறது"."எறும்புகள் இரவுகளில் வானில் பரந்து போவதாகவும் .எறும்புகளுக்கு கடவுளின் இடம் தெரியும்" என்றும் ஆதிலட்சுமி சொல்லும் போது வாயடைத்து போய் கேட்டுக்கொண்டிருக்கும் நாகு போல் நானும் ஆதிலட்சுமி வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சிறுவன் நாகு நம்முடன் அலைந்து திரிந்த பால்ய கால நண்பர்களை நினைவுபடுத்துகிறான்..எறும்புகள் மொய்த்துப் போய் தரையில் கைகளை தேய்த்தபடி இருக்கும் சென்னம்மாவின் வீட்டைக்கடக்க நமக்கும் பயம் கவ்விக் கொள்கிறது.

ஒரு கதை என்பது உண்மைக்கு எவ்வளவு நெறுக்கமாக உள்ளது,அதே சமையம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கொண்டே தீர்மாணிக்கப்படுகிறது.இந்த அளவுகளில் நேர்த்தியாக விளையாடக் கூடியவர் ராமகிருஷ்ணன்.

ஊரைச்சுற்றி வரும் இரண்டு பரதேசிகள் மனதிற்கு மிகவும் நெறுக்கமானவர்களாக உள்ளார்கள்.வெகு நாள் கழித்து ஊருக்கு வரும் பரதேசிகள் வரவேற்பவர்களற்று தின்ன உணவற்று அலைகிறார்கள்.பசி புரயோடிப்பொகும் போது ரோஜாவின் அழகு தெரிவதில்லை.பஞ்சம் பரதேசிகளைக் கூட பீடித்து விடுகிறது.புறக்கணிப்பயும் உதாசீனத்தயும் தாங்கமுடியாமல் பசியோடு மூத்திரம் பெய்தபடியே கொச்சையாக ஏசிக்கொண்டு நடந்துசெல்லும் அவர்களின் இரவு மனதை கசக்குவதாய் இருக்கிறது.

சொந்த பூமி என்பது ரத்த சம்மந்தமுள்ள உறவாகவே கிராமங்களில் கருதப்படுகிறது.பசு மாடுகளையும் ,ஆடுகளையும் புத்திரர்களைப் போல நேசிக்கும் மனிதர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்.அழுகையை மறைக்க தெரியாத பெண்களும்.உக்கிரத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஆண்களுமாய் வேம்பலை வெம்மை உடையதாகவே இருக்கிறது.

வீட்டின் மீது பூனை போல் ஏறி வரும் வெயிலை நோக்கி, "என்னடா பெரிய மசுருன்னு நெனப்பா ? .வந்தேன் வக்காளி வகுந்திடுவேன் !" ன்னு தன் சூரிக்கத்தி எடுத்து கத்தும் சிங்கிக் கிழவனின் சப்தம் பிரம்மாண்டமானதாக எதிரொலிக்கிறது.


"ஊரின் சுபாவம் மக்களின் மீது படிந்து விடுகிறதா? அல்லது மக்களின் சுபாவம் ஊரின் மீது படிந்து விடுகிறதா என்றே தெரிவதில்லை".என்று 'கதாவிலாசத்தில்' ஒரு வாக்கியம் வரும்.கோடையில் துடங்கும் கதைவெளி வசந்தம்,மழை காலங்களைக் கடந்து பனிக்காலத்தில் முடிகிறது.பருவ காலங்கள் கூட மக்களின் மீது அப்பிக்கொண்டு விடுகிறது.வெயிலில் உக்கிரமேறிப்போகும் சுபாவமும்,"மழைக்குப் பின் மக்களின் பேச்சில் கூட குளிர்மை ஏறி இருந்தது..."மழை முடிந்த காலையில் மக்கள் விடாது புன்னகைத்த வண்ணமே இருந்தார்கள்" போன்ற அவதானிப்புகளே இதற்கு சான்று.

வருடங்கள் ஏறிய பின்னும் ஊர் தன் சுபாவங்களை மாற்றிக் கொள்வதே இல்லை.கதைவேளையில் மூன்று தலைமுறைகளை கடந்து விட்ட பின்னும் வேம்பலைக்குத்திரும்பும் மக்கள் தன் ஊரிடம் தங்களை ஒப்படைத்தபடியே இருக்கிறார்கள்.

ஊர் ஓர் விசித்திர முடிச்சு!.தனக்கு பிரியப்பட்டவர்கள் கால்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கயிற்றை கட்டி வைத்துள்ளது.தனக்கு தேவையான போது அவர்களை தனக்குள் இழுத்த்க் கொள்ளவும், நினைக்கும் போது அவர்களை வேளியேற்றவும் அது தயங்குவதே இல்லை.வேம்பலை ஒரு நீள் கதை.

இதைப் படிக்கும் போது நாம் சுற்றி அலைந்த ஊர்களும்,பிரிந்து வந்து விட்ட வீடுகளும்,ஏதேதோ ஊர்களில் கிடந்து உறங்கிய விழாக்கால ஊர்களின் நினைவு மேலெழுகிறது.கயிறு ஏதேனும் தென்படுகிறதா என்று என் கால்களிலும் தடவிப் பார்க்கிறேன்.எந்த ஊர் நம்மை எப்போது இழுத்துக் கொள்ளுமோ என்று பயமாக உள்ளது !.

வீட்டிலிருந்து திடீரென காணாமல் போகும் ஆண்களும்,கண்ணீர் உரைந்து போன பெண்களும்,மிதமிஞ்சிய போதையில் திரியும் வாலிபர்களும்,குறுதிக்கறை ருசிகண்ட பூமி என வேம்பலை கண்முன்னே விரிந்து கிடக்கிறது.வேம்பலை எங்கோ இருக்கும் இடமல்ல !.நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு வாழ்வியல்.

பொன்னும் பவழமும் சிதரிக்கிடக்கும்,வனிகம் செழித்துப் பொங்கும், மும்மாரி பெய்யும்,கற்புக்கரசிகள் மழை கொண்டுவருவார்கள் என்றெல்லாம் மட்டுமே சொல்லப்பட்ட முலாம் பூசிய சரித்திர விஸ்தரிப்புகளிலிருந்து வேறுபட்டு ஒரு கலாச்சாரத்தின் உண்மயான,எதார்த்தமான வாழ்வியல்,அவர்களின் நம்பிக்கைகள்,சட்டதிட்டங்கள்,உறவுகள் என்று உண்மயின் ஒரு துண்டாக விழுந்திருக்கும் இந்நாவல் தமிழர்களை பிரதிபலிப்பதில் முக்கியாமான படைப்பு.அதனாலே இதை தமிழில் தலைசிறந்த படைப்பு என்று சொல்கிறேன்.

நெடுங்குறுதி என்பது ஒரு புத்தகம் அல்ல.அது ஒரு அனுபவம்.தீவிர இலக்கிய ,கலாச்சார தேடல் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று !

(இதில் கதையில் ஒரு பகுதியை மட்டுமே நான் எடுத்தாண்டுள்ளேன்.இனி இப்புத்தகத்தைப் படிப்பவர்களின் ஆர்வத்தை குறைக்காமலிருக்கவும், நேரமின்மையாலும் கதையின் பெரும்பான்மையானவற்றை பற்றி நான் பேசவில்லை.என்னை மிகவும் கவர்ந்த வேம்பலை பற்றி மட்டுமே பேசியுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

புத்த்கத்தின்...

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : உயிர்மை
விலை : 275

* * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Thursday, August 24, 2006

காதலால் ஆதலால்...(3)

மழை...மின்னல்...அவள்
---------------------------------


அன்று கும்ம் இருட்டு...
இருட்டென்றால் எப்படி சொல்வது..?
அவள் கூந்தல் போல இருட்டென்று சொல்லலாம்
இல்லை..இல்லை..அவள் கருவிழி இருட்டு

அப்படி யொரு மழை
மழை யென்றால்..அது அது
அவளது பேச்சைப் போல மழை

அய்யோ அந்த மின்னல்
மின்னலென்றால்...மின்னல்
அவள் பார்வை போன்ற மின்னல்

உலகைப் பிறட்டும் இடி
இடியென்றால் ...அப்பப்பா..
அவள் கோபம் போல

எவ்வளவு நேரம்...
கொஞ்ஜம் கூட குறையவே இல்லை...
அவள் சிற்றூடல் போல

எப்படியோ சமாதானம் ஆயிற்று
என்ன ஒரு அமைதி...
அவளது மோகம் போல

எப்படியோ விடிந்தது
கதிரவன் கைகாட்டியது ஆத்தே!
என்ன பிரகாசம்...அவள் புன்னகை போல..

~ 2003


காதலால் ஆதலால்...(2)


பந்தம்
--------------

எங்கள் பந்தம்...
வார்த்தைகளில் சிக்காத சொந்தம்
காமம் கடந்ததொரு காதல்..
காதலும் கடந்ததொரு நட்பு ..
நட்பும் கலந்ததொரு உறவு..
உறவும் கடந்ததொரு உரிமை..
உரிமையும் கடந்ததொரு ..
உணர்வு உணர்வும் கடந்ததொரு உண்ணதம் ..

உதட்டளவில் சொன்னால் "உண்மை"..
உண்மையில் சொன்னால் 'உயிர்' ..!

~ 2003

Wednesday, August 23, 2006

கல்வெட்டுக்கள்


கல்வெட்டுக்கள்
-----------------------

பாழான பழைய தியேட்டர்
சுவர்கள் புதுப்பிக்கும் போதும்

பொதுக்க் கழிப்பிடம் எப்போதாவது
பெயிண்ட்டடிக்கும் போதும்

மந்திரி வருவதறிந்து, அவசரமாய் ரயில்கள்
அழகுபடும் போதும்

கட்டுப்பட்டுக் காத்திருந்த சாலயோர மரங்கள்
வெட்டப்படும் போதும்

சரிந்து ஆடும் கல்லூரி மேசைகள்
சரிபார்க்கப்படும் போதும்

சிதைவு பலபட்ட ஹாஸ்டல் கதவுகள்
அலங்கரிக்கும் போதும்

பள்ளியோர கள்ளி மரங்கள்
களையெடுக்கப்படும் போதும்...

காணாமல் போகும்
சில காதல் கல்வெட்டுக்கள் !!

-2003


நெடுங்கேள்வி


நிலவின் பின் பக்கத்தை
ஏன் யாரும் ரசிப்பதே இல்லை ?

காதலியின் கோபத்தை
ஏன் யாரும் சகிப்பதில்லை ?

அலாரம் அடிக்கும் முன்னே
அம்மா ஏன் எழுந்து கொள்கிறாள் ?

பள்ளிக்கூட கடைசி மணி
ஏன் மிக வேறுமையாய் உள்ளது ?

கல்லறைப் பூக்கள்
ஏன் சிரிப்பை மறந்து விடுகிறன ?

கடற்கரை காதலர்களுக்கு
ஏன் மணல் சுடுவதே இல்லை ?

சண்டையிட்ட நண்பர்கள்
ஏன் மண்ணிப்பு கேட்பதே இல்லை ?

பொய் சொல்லும் கவிஞனை
அவன் அம்மா தண்டித்திருப்பாளா ?

கழுதை ஏன் பாடுவதே இல்லை ?

பாரதி ஏன் இறந்து போனான் ?

அடுத்த ஊருக்கு வழியனுப்பினாளும்
ஏன் அழுகிறாள் தாய் ?

ஓளிந்து கோண்டே வந்த பஸ் பயண பெண்மணி
இறங்கியவுடன் ஏன் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் ?

'ஔவை' -யை ஏன்
ஒ-ள-வை என்று நாம் படிப்பதில்லை ?

காதலி ஏன் கண்பார்த்து அழுவதில்லை ?

கண்விழிக்கும் போது மட்டும்
ஏன் இரவு நீளமாய் உள்ளது ?

அலாவுதீனின் விளக்கை
இப்போது யார் வைத்திருக்கிறார்கள் ?

நாம் ஏன் இன்னும்
கேள்விகேட்டுக்கோண்டெ இருக்கிறொம் ?

ஆமாம்...
நீங்கள் ஏன் இன்னும் கவிதை படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் ? !

-2005

புரியாவிடை

எல்லா ஹோட்டலிலும்
தொலைந்துபோன தன் படிப்பை
தொடைத்து எறிகிறான் ஒரு சிறுவன்


'என் மகனை எந்த கல்லூரியில் சேர்ப்பது ?'
பழைய மாணவனிடம் பாடம் கேட்கிறார்
வாத்தியார்

வளர்ந்த பிறகு
பிடித்து விடுகிறது
வெறுத்த பள்ளியும்
சபித்த டீச்சர்களும்

பிரிவின் நினைவில்
ரசித்து சிரிக்கிறோம்
காதலியின் கோபத்தை

கவிதை வரி முண்டியடித்துக்கொண்டு
வரும் வேளையில்...

இதோ.!
முடிந்து போகிறது பக்கம் !!

-2005

Tuesday, August 22, 2006

ரேகைகளற்றவன்

சொந்த வீடு என்பது சிலருக்கு கனவு ,சிலருக்கு நனவு, பலருக்கு அது நினைவில் மட்டும் நிற்க்கும் ஒரு சொர்க பூமி.எங்கெங்கோ ஊரை விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு சொந்த ஊர் நினைவுகள்,சொந்த வீட்டின் நினைவுகள் ஒரு பூனையைப் போல் நம் கால்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கின்றது.வீடு சந்தோஷம்.அது இருக்கும் வரை இருப்பதாகவே தெரிவதில்லை.சொந்த வீட்டை இழந்தவர்கள் சிதைந்தவர்கள் தங்கள் அடையாளங்கள் அழிந்து விட்டதாகவே அலைகிறார்கள்.அப்படியொரு அடயாளமற்ற பின்குறிப்பு இதோ....


ரேகைகளற்றவன்


டிசம்பர் 25 மதியம் வீட்டுக்கு தொலைப் பேசியிருந்தேன்.எங்கள் வீடு விலைபேசப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.அதன் பிறகு என்னவெல்லாம் சொன்னார்கள் என்று எனக்கு நினைவில்லை.தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை.

ஒரு நாளில் எத்தனையோ பொருட்களை வாங்குகிறோம் , செலவழிக்கிறோம்.அதுபொல வீடும் ஒரு பண்டம் தானா?.வீடு கற்களாலும் , மண்ணாலும் மட்டும்தான் ஆக்கப்பட்டுள்ளதா?.அப்படியானால் ஏன் இதயம் இப்படி கிணற்றுக்கடியில் கிடக்கும் கல்லைப்போல் கணக்க வேண்டும் ?.

வீடு என்பது ஒரு விசித்திர வெளி ( வேலியும் தான் ! ).அங்கு தனித் தனி உலகங்கள் இயங்குகின்றன,போர்கள் நடக்கின்றன,தெய்வங்கள் வருகின்றன,தோன்றி மறைகின்றன.வீடுகள், கல் மண்ணைத் தவிர்த்து கண்ணீர்,புண்ணகைகள்,ஆசைகள்,நிசப்தம்,விசும்பல்,வெளிப்படுத்த முடியாத கோபங்கள்,போராட்டங்களால் ஆனது தானே?.வருடங்கள் ஏற ஏற வீட்டின் மூலப்பொருட்கள் கூடிக்கொன்டே போகிறது.இது ஒரு மர்மச் சாம்பல் !

காங்ரீட் பூக்களாக என் மலர்ந்திருக்கும் வீடு என்னை என் தாயை விட அதிக நாள் சுமந்திருக்கிறது.முதல் முறை நடக்க பழகிய போது தடுக்கி விழுந்த போது தரைகளின் மீது கொண்டிருந்த கோபம் அளப்பறியது.பெரியவனானதும் கண்டிப்பாக ஒரு நாள் தரைக்கு வலிக்குமாறு அடித்து விடவேண்டும் என ரௌத்திரம் கொண்டிருந்தவனாக இருந்தேன். அக்கோபம் பின்னாளில் பாசமாக மாறியிருக்கும்படி பரிபாஷைகள் புரிந்த நிலவெளியை உயிரற்றது என்று எப்படி சொல்ல முடியும் .இன்னும் ஏதேதோ மூலைகளில் யார் யாருடைய விசும்பல் சத்தங்களையோ என் வீடு சேகரம் செய்து வைத்துள்ளது தானே ?.என் வீடெங்கும் என் பாத சுவடுகள் நிரம்பிக்கிடக்கின்றன.எல்லா சுவர்களிலும் என் கைரேகைகள் பதிந்து இருக்கிறது...என் கைரேகைகளின் ஓவியப்பதிவு அல்லவா என் வீடு!- அப்படியானால் என் வீடல்லாத நான் ரேகைகளற்றவனாகிவிடுவேனா ? வீடு என்பது எப்போதும் பால்யத்தின் பதிவு.இன்னும் ஏதேதோ சுவர் விளிம்புகளில்,படிக்கட்டு முக்குகளில் அடித்துத் தெரித்த குறுதிக் கறைகளை சுமந்துகொண்டல்லவா இருக்கிறது.நான் மறுமுறை அங்கு செல்ல நேரிட்டால் என்னை நினைவு வைத்திருக்குமா என் சுவர்கள்.

ஆண்களுக்கு வீடு என்பது ஒரு அறை அவ்வளவு தான்.பெண்களுக்கு அது உலகம்...ஒரு பொருள் நம்மை விட்டு போய்விடும் என்று தெரிந்த பிறகு அவர்கள் அதன் மீது காட்டும் அன்பை மறைக்கத்தெரியாத நிராகரிப்பு நிலைகொள்ள முடியாததாக இருக்கிறது.விலை பேசப்பட்ட வீட்டின் பெண்கள் உறக்கமற்று விழித்த இரவுடயவர்களாகவே உள்ளார்கள். ஆண்கள் வீட்டிற்க்கு வர விருப்பமற்றவர்களைப் போல ஊர் அடங்கி பின்னிரவினில் வருவதும்,அதிகாலயிலேயே கிளம்புபவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியூர் செல்பவர்கள் ஏதோ உறவினர்களை விட்டு செல்வதைப் போல் சென்று விடுகிறார்கள்.ஆட்களின் வருகைகளற்ற பூட்டப்பட்ட வீடுகள் தனக்குள் ஒரு ரகசியத்தைப் பேசி அசை போட்ட வண்ணம் இருக்கிறது.வீட்டை விற்ற நகரத்தில் மீண்டும் வாழ்வது துரதிஷ்டமானது !.

ஆயிரமாயிரம் துன்பங்கள் இருக்கும் போதும் தாய் மடிபோல் ஆறுதல் அளிப்பது வீட்டின் நிழல் தான்.அது நினைவுகளின் பத்தாயம்.வீட்டின் ஒவ்வொரு செங்கலும் நம்க்கு ஒவ்வொன்றை நினைவு படுத்திய விதமே இருக்கின்றது.அது ஞாபகங்களின் அடுக்கு.அதை விட்டு வேறு ஒரு விசித்திர கிரகத்தில் நான் குடியேறிய பிறகு - நான் சிரிப்பது சிரிப்பு போலவே இருக்குமோ என்றோ,சமையலின் ருசி அதே போல் இருக்குமோ என்றோ...என்னால் உறுதியாக கூற முடியாது !.ஏனெனில் வீடு ஒவ்வொருவர் காற்றில் கலந்திருக்கிறது !

என் நினைவுகளின் பெட்டி தொலைந்துவிட்டிருக்கிறது !

***முற்றும்***

கடைசி கடிதம்



நிராகரிப்பின் சோகம் நிலைகொள்ளாமல் போகும்போது வார்த்தைகள் வலுவற்றதாகிவிடுகிறது...இறுதி எப்பொதும் வசீகரம் நிறைந்ததாகவே இருக்கிறது.கடைசி முத்தம், கடைசி பார்வை, கடைசி கை அசைப்பு, கடைசி பயணம் என்று.பிரியம் கூடிவிட்டிருந்த நண்பர்களின் பிரிவு துக்கங்களை கக்கிய வண்ணமிருக்கின்றன.

அப்படியான அரிய வெளிப்பாடுகளில் ஒன்று இது...



பாசமிகு தோழி...


தெரியவில்லை...இதை ஏன் எழுதுகிறேன் என்றே.இரண்டு வாய்ப்பு உண்டு .இதைப்ப் படித்து முடித்து கொச்சையாக உமிழ்ந்து கிழித்து எறிந்து விடலாம்.அல்லது சப்தங்கள் அடங்கிவிட்ட ஒரு இரவின் ச்ங்கீதமாய் கேட்டு நகர்ந்து போய் விடலாம்.

மௌனத்தின் பிரம்மாண்டமான மதில் சுவர்களை கடக்க முடியாமல் அதன் சுவற்றிலே ஊறும் ஒரு பூரானைப் போல பேசவேண்டியவை மூலையில் முடங்கி இருக்கின்றன.ஆனால் வார்த்திகள் வடிகாட்டி விடுகிற மென் பாடலை பரஸ்பர மௌனங்கள் வெளிப்படுத்திவிடுகின்றன.

பகிர்ந்து கொள்ளுதல் வார்த்தைகள் வழியாக சாத்தியப்ப் படும்போது உறவுகள் ஆசுவாசப்படுகின்றன.வார்த்தைகள் நாம் உமிழும் வரை தான் நமக்கு சொந்தமாகின்றன - அதன் பின் பிரபஞ்ச னீள் கடலின் மனற்பரப்பில் புதைந்து விடுகின்றன.கடலோரத்தில் கிளிஞ்சல்களை பொறுக்கிய வண்ணம் ஒரு சிருவன் செல்வதைப் பார்க்கின்றேன் .ஒரு கையளவு கிளிஞ்சல்கள் செர்ந்தவுடனே அதை கொட்டிவிட்டு மீண்டும் தன் முடிவற்ற தெடலில் புதைந்தவனாக அவன் இருந்தான்.

இரவின் கண்ணீர் மிகவும் கனத்ததாக இருக்கின்றது.நிராகரிப்பின் ஒலி எங்கோ நீண்டு ஒலிக்கின்றது.புறக்கணிப்பின் சோகம் படிந்த மனற்மேடுகளில் பரல்களை உருட்டும் சப்தம் கேட்டவண்ணமே இருக்கிறது. யார்யாரோ இரவுகளில் உறக்கமற்று அலைகிறார்கள்.

ஆனால் பிடித்திருக்கிறது இது.காயங்கள் அற்ற நாட்கள் யார் நினைவிலும் நிலைப்பதில்லை .
ரணங்களற்ற முகங்களை யவரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை.
எதையுமே நினைவுபடுத்தாத முகங்கள் எளிதில் மறக்கப்பட்டுவிடும்.

அந்த அளவில் யவருடைய உரையாடல்கள் மூலமோ,சில கவிதைகள் மூலமோ,உன் பெயர் கொண்ட
சிறுமிகள் மூலமோ என் நெஃப்ரான்களின் பயண்பாட்டு பங்கீடுகளில் நீயும் கலந்து கொள்வாய்.

இவை அனைத்தும் புரிந்து கொள்வதற்காக எழுதியதாக எனக்கு தெரியவில்லை.எனது
வார்த்தைகள் அந்தி கழிந்து மதிலேறி நிறயும் இருட்டு.இருள் ஒரு வகையில் அசௌகரியம்.
ரசிக்கப் பழகியவர்களுக்கு, அழகு.உங்கள் மெழுகுபத்திகளை அனைத்து விடுங்கள்.ஏனெனில்,
ஒரு சிறு தீக்குச்சியின் ஒளி கூட நிலவின் ரம்யத்தை ரசிக்க விடாமல் தடுத்துவிடலாம்...

தெரிகிறது... நீ என்ன சொல்கிறாய் என்று...என்ன செய்வது...


******** ஆழ்ந்த புரிதல்களில் *******
எழுந்த கவிதை

எதிர்கொள்ளும் போது
எதுவும் புரிவதில்லை

******** ~ மனுஷ்ய புத்திரன் ***********

***முற்றும்***








Thursday, June 29, 2006

சாலைப்பூ


தோழி...

உன் பிறந்த நாள் வாழ்த்து அட்டைக்கான
வார்த்தைகள் தேடிச் சலித்ததில்
துடங்கிற்று இக்கவிதை

நினைவு ஜன்னல்களின்
கட்டமிட்ட சல்லடைகளில்
சலித்ததால் வந்திருக்கும்
இவ்வளவு வார்த்தைகள்

ஒன்றாக உரக்க சிரிக்கும் போதும் கூட
ஒட்டிக்கொண்டிருக்கும் வேற்றுமைகள்,
அருகருகே இருந்தும்
அமைதியாய் இருந்த தருணங்களில்தான்
அரும்புகின்றன நட்புக்கான முதல் விதை

என்னுடன் நீ பேசியதை விட
எனக்காக நீ பேசிய தருணங்கள்
மகத்தானவை

நாம் தன்டவாளத்தின் ஒரு துன்டு
ஒலிக்கயில்...-கை கோர்த்து
பள்ளிக்கு ஓடியதில்லை !

ஒற்றை சைக்கிளில்
ஊர் சுற்றியதில்லை

பல்லங்குழியின் காசிக்கட்டங்களில்
உள்ளங்கையின் சூட்டை
உணர்ந்ததில்லை

இருந்தாலும்...

பறிக்கப்படாத சாலைப்பூக்களின்
அமைதியைப்போலவும்
நல்லிரவு கடந்து விட்ட
தெருவிளக்கின் கருணை போலவும்

நமக்கான நம் நட்பு
நாளும் பூத்திருக்கும்......

காதலால் ஆதலால்...(1)


1.
காதலால் ஏவாள்
கடித்ததால் தான்
ஆப்பிள் இன்னும் இனிக்கிறதோ !


2.

நீ கசக்கினாலும் இருக்கட்டும்நான்
உன் கைக்குட்டயாகவாவது இருக்கிறேன்


3.இந்த வலி
எனக்கு பிடிதிருக்கிறது
காரணம்இது நீ தந்தது !


4.
நான் உன் சிகரட் -
என்னை
உதடு சுடும் வரை குடி

நான் உன் நகம் - என்னை
காயமாக்கும் வரை கடி

நான் உன் நினைவு - என்னை
மறக்கும் வரை நினை

நான் உன் இதழ்கள்
உலர உலர என்னை ஈரப்படுது

நான் உன் கைக்குட்டை என்னை
நனையும் வரைத் துடை

நான் உன் கேசம்
நேசத்தோடு என்னை கோது

நான் உன் மனசாட்சி
என்னைக் காதலிப்பதாகச் சொல் !!