Thursday, August 31, 2006

என் ஜன்னலின் வழியே- 'நெடுங்குருதி'

நெடுங்குருதி - தமிழின் தலை சிறந்த படைப்பு

( இந்த விமர்சணத்தை படித்து பார்த்து,இதைப்பதிவிட ஒப்புதலும்..பாரட்டும் அளித்த ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி )


புத்தக கடைகளில் ஒரு நாவல் என்னை படிக்குமாறு நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருக்கிறது.விலையும்,வேலையும் ஒத்திப்போட்டுக் கொண்டே வந்தது.

படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏற்கனவே அலமாரிகளில் காத்திருந்த போதும் புது புத்தகங்கள் வாங்குவதை நிறுத்த முடிவதே இல்லை. மிட்டாய்க்காரன் பின்னால் செல்லும் ஒரு குழந்தையைப் போல மனம் மீண்டும் மீண்டும் அச்சுக்களை நோக்கி செல்கிறது.அப்படி புத்தகமே வாங்கக்கூடாது என்று வைராக்கியமாக கடைக்குள் நுழைந்த ஒரு பொழுதில் 'நெடுங்குருதி' வாங்கினேன்.

நாவலின் முதல் பக்கத்திலிருந்தே புதிய ஒரு உலகத்தில் ப்ரவேசிக்கும் அனுபவம் உண்டாகிறது.வெயில் உக்கிரமேறிப் போன 'வேம்பலை' என்ற கிராமத்தில் கதை சம்பவிக்கின்றது.எந்த கதாபாத்திரத்தயும் சுற்றிவராமல் நிகழ்வுகள் வேம்பலை என்ற நிலவெளியை சஞ்சரித்து வருகிறது.கதையில் படிந்திருப்பது வேம்பலையின் நிழல் மட்டும் அல்ல!.ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற ஆட்கள்-ஒடுங்கிவிட்ட-கிராமங்களின் நிழல் தான் கதை எங்கும் படிந்து கிடக்கிறது.

வேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள்.அவர்கள் நம்பிக்கைகள் ,வழிபாடுகள் அனைத்தும் கேட்டிராதவையாக இருக்கிறது.ஒருவேளை நம் முன்னோர்கள் இப்படித்தான் அலைந்து கொண்டிருந்திருப்பார்கள் போல."எறும்புகள் ஒரு ஊரை விட்டு விலகிப்பொனால்,அந்த ஊர் மனிதர்கள் வாழ சாத்தியமற்று போகிறது"."எறும்புகள் இரவுகளில் வானில் பரந்து போவதாகவும் .எறும்புகளுக்கு கடவுளின் இடம் தெரியும்" என்றும் ஆதிலட்சுமி சொல்லும் போது வாயடைத்து போய் கேட்டுக்கொண்டிருக்கும் நாகு போல் நானும் ஆதிலட்சுமி வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சிறுவன் நாகு நம்முடன் அலைந்து திரிந்த பால்ய கால நண்பர்களை நினைவுபடுத்துகிறான்..எறும்புகள் மொய்த்துப் போய் தரையில் கைகளை தேய்த்தபடி இருக்கும் சென்னம்மாவின் வீட்டைக்கடக்க நமக்கும் பயம் கவ்விக் கொள்கிறது.

ஒரு கதை என்பது உண்மைக்கு எவ்வளவு நெறுக்கமாக உள்ளது,அதே சமையம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கொண்டே தீர்மாணிக்கப்படுகிறது.இந்த அளவுகளில் நேர்த்தியாக விளையாடக் கூடியவர் ராமகிருஷ்ணன்.

ஊரைச்சுற்றி வரும் இரண்டு பரதேசிகள் மனதிற்கு மிகவும் நெறுக்கமானவர்களாக உள்ளார்கள்.வெகு நாள் கழித்து ஊருக்கு வரும் பரதேசிகள் வரவேற்பவர்களற்று தின்ன உணவற்று அலைகிறார்கள்.பசி புரயோடிப்பொகும் போது ரோஜாவின் அழகு தெரிவதில்லை.பஞ்சம் பரதேசிகளைக் கூட பீடித்து விடுகிறது.புறக்கணிப்பயும் உதாசீனத்தயும் தாங்கமுடியாமல் பசியோடு மூத்திரம் பெய்தபடியே கொச்சையாக ஏசிக்கொண்டு நடந்துசெல்லும் அவர்களின் இரவு மனதை கசக்குவதாய் இருக்கிறது.

சொந்த பூமி என்பது ரத்த சம்மந்தமுள்ள உறவாகவே கிராமங்களில் கருதப்படுகிறது.பசு மாடுகளையும் ,ஆடுகளையும் புத்திரர்களைப் போல நேசிக்கும் மனிதர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்.அழுகையை மறைக்க தெரியாத பெண்களும்.உக்கிரத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஆண்களுமாய் வேம்பலை வெம்மை உடையதாகவே இருக்கிறது.

வீட்டின் மீது பூனை போல் ஏறி வரும் வெயிலை நோக்கி, "என்னடா பெரிய மசுருன்னு நெனப்பா ? .வந்தேன் வக்காளி வகுந்திடுவேன் !" ன்னு தன் சூரிக்கத்தி எடுத்து கத்தும் சிங்கிக் கிழவனின் சப்தம் பிரம்மாண்டமானதாக எதிரொலிக்கிறது.


"ஊரின் சுபாவம் மக்களின் மீது படிந்து விடுகிறதா? அல்லது மக்களின் சுபாவம் ஊரின் மீது படிந்து விடுகிறதா என்றே தெரிவதில்லை".என்று 'கதாவிலாசத்தில்' ஒரு வாக்கியம் வரும்.கோடையில் துடங்கும் கதைவெளி வசந்தம்,மழை காலங்களைக் கடந்து பனிக்காலத்தில் முடிகிறது.பருவ காலங்கள் கூட மக்களின் மீது அப்பிக்கொண்டு விடுகிறது.வெயிலில் உக்கிரமேறிப்போகும் சுபாவமும்,"மழைக்குப் பின் மக்களின் பேச்சில் கூட குளிர்மை ஏறி இருந்தது..."மழை முடிந்த காலையில் மக்கள் விடாது புன்னகைத்த வண்ணமே இருந்தார்கள்" போன்ற அவதானிப்புகளே இதற்கு சான்று.

வருடங்கள் ஏறிய பின்னும் ஊர் தன் சுபாவங்களை மாற்றிக் கொள்வதே இல்லை.கதைவேளையில் மூன்று தலைமுறைகளை கடந்து விட்ட பின்னும் வேம்பலைக்குத்திரும்பும் மக்கள் தன் ஊரிடம் தங்களை ஒப்படைத்தபடியே இருக்கிறார்கள்.

ஊர் ஓர் விசித்திர முடிச்சு!.தனக்கு பிரியப்பட்டவர்கள் கால்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கயிற்றை கட்டி வைத்துள்ளது.தனக்கு தேவையான போது அவர்களை தனக்குள் இழுத்த்க் கொள்ளவும், நினைக்கும் போது அவர்களை வேளியேற்றவும் அது தயங்குவதே இல்லை.வேம்பலை ஒரு நீள் கதை.

இதைப் படிக்கும் போது நாம் சுற்றி அலைந்த ஊர்களும்,பிரிந்து வந்து விட்ட வீடுகளும்,ஏதேதோ ஊர்களில் கிடந்து உறங்கிய விழாக்கால ஊர்களின் நினைவு மேலெழுகிறது.கயிறு ஏதேனும் தென்படுகிறதா என்று என் கால்களிலும் தடவிப் பார்க்கிறேன்.எந்த ஊர் நம்மை எப்போது இழுத்துக் கொள்ளுமோ என்று பயமாக உள்ளது !.

வீட்டிலிருந்து திடீரென காணாமல் போகும் ஆண்களும்,கண்ணீர் உரைந்து போன பெண்களும்,மிதமிஞ்சிய போதையில் திரியும் வாலிபர்களும்,குறுதிக்கறை ருசிகண்ட பூமி என வேம்பலை கண்முன்னே விரிந்து கிடக்கிறது.வேம்பலை எங்கோ இருக்கும் இடமல்ல !.நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு வாழ்வியல்.

பொன்னும் பவழமும் சிதரிக்கிடக்கும்,வனிகம் செழித்துப் பொங்கும், மும்மாரி பெய்யும்,கற்புக்கரசிகள் மழை கொண்டுவருவார்கள் என்றெல்லாம் மட்டுமே சொல்லப்பட்ட முலாம் பூசிய சரித்திர விஸ்தரிப்புகளிலிருந்து வேறுபட்டு ஒரு கலாச்சாரத்தின் உண்மயான,எதார்த்தமான வாழ்வியல்,அவர்களின் நம்பிக்கைகள்,சட்டதிட்டங்கள்,உறவுகள் என்று உண்மயின் ஒரு துண்டாக விழுந்திருக்கும் இந்நாவல் தமிழர்களை பிரதிபலிப்பதில் முக்கியாமான படைப்பு.அதனாலே இதை தமிழில் தலைசிறந்த படைப்பு என்று சொல்கிறேன்.

நெடுங்குறுதி என்பது ஒரு புத்தகம் அல்ல.அது ஒரு அனுபவம்.தீவிர இலக்கிய ,கலாச்சார தேடல் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று !

(இதில் கதையில் ஒரு பகுதியை மட்டுமே நான் எடுத்தாண்டுள்ளேன்.இனி இப்புத்தகத்தைப் படிப்பவர்களின் ஆர்வத்தை குறைக்காமலிருக்கவும், நேரமின்மையாலும் கதையின் பெரும்பான்மையானவற்றை பற்றி நான் பேசவில்லை.என்னை மிகவும் கவர்ந்த வேம்பலை பற்றி மட்டுமே பேசியுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

புத்த்கத்தின்...

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : உயிர்மை
விலை : 275

* * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *