ரேகைகளற்றவன்
டிசம்பர் 25 மதியம் வீட்டுக்கு தொலைப் பேசியிருந்தேன்.எங்கள் வீடு விலைபேசப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.அதன் பிறகு என்னவெல்லாம் சொன்னார்கள் என்று எனக்கு நினைவில்லை.தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை.
ஒரு நாளில் எத்தனையோ பொருட்களை வாங்குகிறோம் , செலவழிக்கிறோம்.அதுபொல வீடும் ஒரு பண்டம் தானா?.வீடு கற்களாலும் , மண்ணாலும் மட்டும்தான் ஆக்கப்பட்டுள்ளதா?.அப்படியானால் ஏன் இதயம் இப்படி கிணற்றுக்கடியில் கிடக்கும் கல்லைப்போல் கணக்க வேண்டும் ?.
வீடு என்பது ஒரு விசித்திர வெளி ( வேலியும் தான் ! ).அங்கு தனித் தனி உலகங்கள் இயங்குகின்றன,போர்கள் நடக்கின்றன,தெய்வங்கள் வருகின்றன,தோன்றி மறைகின்றன.வீடுகள், கல் மண்ணைத் தவிர்த்து கண்ணீர்,புண்ணகைகள்,ஆசைகள்,நிசப்தம்,விசும்பல்,வெளிப்படுத்த முடியாத கோபங்கள்,போராட்டங்களால் ஆனது தானே?.வருடங்கள் ஏற ஏற வீட்டின் மூலப்பொருட்கள் கூடிக்கொன்டே போகிறது.இது ஒரு மர்மச் சாம்பல் !
காங்ரீட் பூக்களாக என் மலர்ந்திருக்கும் வீடு என்னை என் தாயை விட அதிக நாள் சுமந்திருக்கிறது.முதல் முறை நடக்க பழகிய போது தடுக்கி விழுந்த போது தரைகளின் மீது கொண்டிருந்த கோபம் அளப்பறியது.பெரியவனானதும் கண்டிப்பாக ஒரு நாள் தரைக்கு வலிக்குமாறு அடித்து விடவேண்டும் என ரௌத்திரம் கொண்டிருந்தவனாக இருந்தேன். அக்கோபம் பின்னாளில் பாசமாக மாறியிருக்கும்படி பரிபாஷைகள் புரிந்த நிலவெளியை உயிரற்றது என்று எப்படி சொல்ல முடியும் .இன்னும் ஏதேதோ மூலைகளில் யார் யாருடைய விசும்பல் சத்தங்களையோ என் வீடு சேகரம் செய்து வைத்துள்ளது தானே ?.என் வீடெங்கும் என் பாத சுவடுகள் நிரம்பிக்கிடக்கின்றன.எல்லா சுவர்களிலும் என் கைரேகைகள் பதிந்து இருக்கிறது...என் கைரேகைகளின் ஓவியப்பதிவு அல்லவா என் வீடு!- அப்படியானால் என் வீடல்லாத நான் ரேகைகளற்றவனாகிவிடுவேனா ? வீடு என்பது எப்போதும் பால்யத்தின் பதிவு.இன்னும் ஏதேதோ சுவர் விளிம்புகளில்,படிக்கட்டு முக்குகளில் அடித்துத் தெரித்த குறுதிக் கறைகளை சுமந்துகொண்டல்லவா இருக்கிறது.நான் மறுமுறை அங்கு செல்ல நேரிட்டால் என்னை நினைவு வைத்திருக்குமா என் சுவர்கள்.
ஆண்களுக்கு வீடு என்பது ஒரு அறை அவ்வளவு தான்.பெண்களுக்கு அது உலகம்...ஒரு பொருள் நம்மை விட்டு போய்விடும் என்று தெரிந்த பிறகு அவர்கள் அதன் மீது காட்டும் அன்பை மறைக்கத்தெரியாத நிராகரிப்பு நிலைகொள்ள முடியாததாக இருக்கிறது.விலை பேசப்பட்ட வீட்டின் பெண்கள் உறக்கமற்று விழித்த இரவுடயவர்களாகவே உள்ளார்கள். ஆண்கள் வீட்டிற்க்கு வர விருப்பமற்றவர்களைப் போல ஊர் அடங்கி பின்னிரவினில் வருவதும்,அதிகாலயிலேயே கிளம்புபவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியூர் செல்பவர்கள் ஏதோ உறவினர்களை விட்டு செல்வதைப் போல் சென்று விடுகிறார்கள்.ஆட்களின் வருகைகளற்ற பூட்டப்பட்ட வீடுகள் தனக்குள் ஒரு ரகசியத்தைப் பேசி அசை போட்ட வண்ணம் இருக்கிறது.வீட்டை விற்ற நகரத்தில் மீண்டும் வாழ்வது துரதிஷ்டமானது !.
ஆயிரமாயிரம் துன்பங்கள் இருக்கும் போதும் தாய் மடிபோல் ஆறுதல் அளிப்பது வீட்டின் நிழல் தான்.அது நினைவுகளின் பத்தாயம்.வீட்டின் ஒவ்வொரு செங்கலும் நம்க்கு ஒவ்வொன்றை நினைவு படுத்திய விதமே இருக்கின்றது.அது ஞாபகங்களின் அடுக்கு.அதை விட்டு வேறு ஒரு விசித்திர கிரகத்தில் நான் குடியேறிய பிறகு - நான் சிரிப்பது சிரிப்பு போலவே இருக்குமோ என்றோ,சமையலின் ருசி அதே போல் இருக்குமோ என்றோ...என்னால் உறுதியாக கூற முடியாது !.ஏனெனில் வீடு ஒவ்வொருவர் காற்றில் கலந்திருக்கிறது !
என் நினைவுகளின் பெட்டி தொலைந்துவிட்டிருக்கிறது !
***முற்றும்***